பைசாந்தியப் பேரரசு (Byzantine Empire)

பைசாந்தியப் பேரரசு (Byzantine Empire) என்பது, மத்திய காலத்தில், இன்று இஸ்தான்புல் என்று அழைக்கப்படும், கொன்சுதாந்தினோபிளைத் தலைநகரமாகக் கொண்டு விளங்கிய பேரரசைக் குறிக்கப் பயன்படுகின்றது. அங்கு கிரேக்க மொழி பேசப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பெயர் வழங்கி வருகின்றது. இது பொதுவாக மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு முந்திய காலத்தைக் குறிக்கிறது. இது கிழக்கு ரோமப் பேரரசு என அழைக்கப்படுவதும் உண்டு. "பைசாந்தியப் பேரரசு" "கிழக்கு ரோமப் பேரரசு" போன்ற பெயர்கள் பிற்காலத்தில் வரலாற்று எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டவை. அங்கு வாழ்ந்தவர்களைப் பொறுத்தவரை, இதை அவர்கள் ரோமப் பேரரசு என்றோ "ரோமானியா" என்றோதான் அதன் இருப்புக் காலம் முழுதும் அழைத்து வந்தனர்.[2] இது ரோமப் பேரரசின் ஒரு தொடர்ச்சியாகவே கருதப்பட்டதுடன் அதன் பேரரசர்களும், ரோமப் பேரரசர்களின் தொடர்ச்சியான மரபுவழியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். கிபி 5 ஆம் நூற்றாண்டில் மேற்கு ரோமப் பேரரசு துண்டு துண்டாக உடைந்து வீழ்ச்சியுற்றபோதும், அதன் கிழக்குப் பாதி, ஓட்டோமான் துருக்கியர்  1453ல் அதனைக் கைப்பற்றும்வரை, மேலும் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்புடன் இருந்தது. இப்பேரரசின் இருப்புக் காலத்தின் பெரும் பகுதியிலும், ஐரோப்பாவின் பலம் மிக்க பொருளாதார, பண்பாட்டு, படைத்துறை வல்லரசாக இது விளங்கியது.
"ரோம", "பைசாந்திய" ஆகிய அடைமொழிகள் பிற்காலத்து வழக்காக இருந்தாலும், இந்த மாற்றம் ஒரு குறித்த நாளில் நிகழ்ந்தது அல்ல. பல கட்டங்களில் இது நிழ்ந்தது எனலாம். 285 ஆம் ஆண்டில் பேரரசர் டியோகிளீசியன் (ஆட்சிக்காலம் 284-305) ரோமப் பேரரசின் நிர்வாகத்தைக் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி என இரண்டு பாதிகளாகப் பிரித்தார்.[3] 324 ஆம் ஆண்டுக்கும், 330 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பேரரசர் முதலாம் கான்சுதந்தைன் (306-337) பேரரசின் முதன்மைத் தலைநகரை ரோமில் இருந்து போசுபோரசின் ஐரோப்பியப் பக்கத்தில் இருந்த பைசாந்தியம் என்னும் இடத்துக்கு மாற்றினார். இந்த நகரின் பெயர் கான்சந்தினோப்பிள் (கான்சுதந்தைனின் நகரம்) அல்லது நோவா ரோமா (புதிய ரோம்) என மாறியது. பேரரசர் முதலாம் தியோடோசியசின் (379–395) கீழ் கிறித்தவம் பேரரசின் சமயமாக மாறியது. மாறுநிலையின் இறுதிக்கட்டம், பைசாந்தியப் பேரரசர் ஏராக்கிளியசின் ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் தொடங்கியது. இக்காலத்தில், நிர்வாகம், படைத்துறை ஆகியவற்றில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டதுடன், இலத்தீனுக்குப் பதிலாக கிரேக்க மொழியும் நிர்வாக மொழியாக ஆகியது.[4] இக்காலப் பகுதியில், பேரரசினுள் அடங்கியிருந்த கிரேக்க மொழி பேசாத பகுதிகளான மையக்கிழக்கு, வட ஆப்பிரிக்கா என்னும் பகுதிகளை முன்னேறி வந்த அரபுக் கலீபகத்திடம் பேரரசு இழந்ததுடன், அது பெரும்பாலும் கிரேக்கம் பேசுகின்ற பகுதிகளை அடக்கியதாகச் சுருங்கியது. பைசந்தியப் பேரரசு, இலத்தீன் மொழி, பண்பாடு ஆகியவற்றிலிருந்து விலகி கிரேக்க மொழி, பண்பாடு ஆகியவற்றைக் கைக்கொண்டதாலும், ரோம பலகடவுட் கொள்கை கொண்ட சமயத்திலிருந்து கிறித்தவத்துக்கு மாறியதாலும், தற்காலத்தில் அது, பண்டைய ரோமப் பேரரசில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றது.[2]
முதலாம் யசுட்டினியனின் ஆட்சிக் காலத்தில் (527-565) பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்தது. இக்காலத்தில், பண்டைய ரோமப் பேரரசின் பகுதிகளாக இருந்த நடுநிலக்கடற்கரைப் பகுதிகளான இத்தாலி, வட ஆப்பிரிக்கா போன்றவை கைப்பற்றப்பட்டு பேரரசின் ஆட்சிப்பகுதிக்குள் அடங்கியிருந்தன.  ரோம் நகரும் இருநூறு ஆண்டுகள் வரை இதற்குள் அடங்கியிருந்தது. ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யசுட்டினியக் கொள்ளைநோய் எனப்பட்ட ஒரு வகைக் கொள்ளை நோய் தாக்கி மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் பலியாகியதால், பெரிய அளவில் படைத்துறை, நிதிப் பிரச்சினைகளைப் பேரரசு எதிர்கொள்ள நேர்ந்தது. இருந்தாலும், பேரரசர் மாரிசின் ஆட்சிக்காலத்தில் (582–602) பேரரசின் கிழக்கு எல்லைப் பகுதிகள் விரிவடைந்ததுடன், மேற்கு எல்லையும் உறுதியாக இருந்தது. எனினும் 602 ஆன் ஆண்டில் மாரிசு கொலை செய்யப்பட்டதால், சசானியப் பாரசீகத்துடன் இரு பத்தாண்டுகள் நீடித்த போர் ஏற்பட்டது. இப்போரில் பேரரசர் ஏராகிளியசு பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், பேரரசின் மனிதவலுவும், வளங்களும் அழிந்துபோயின. இதனால், ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பைசாந்திய-அரபுப் போர்களின்போது பேரரசு பெருந் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்ததுடன், நிலப் பகுதிகளையும் இழந்தது. எனினும் 10 ஆம் நூற்றாண்டில், மசிடோனிய வம்சத்தின் ஆட்சியின் கீழ் ஐரோப்பா, நிலநடுக்கடல் பகுதிகள் ஆகியவற்றின் மிகப் பலம் பொருந்திய நாடாக மீண்டும் எழுச்சி பெற்றது. 1071க்குப் பின்னர், பேரரசின் முக்கிய பகுதியான சின்ன ஆசியாவின் பெரும் பகுதிகள் செல்யூக் துருக்கியரிடம் வீழ்ச்சியுற்றன.
கொம்னெனிய மீள்விப்பினால் 12 ஆம் நூற்றாண்டில் சிறிது காலம் பேரரசின் முதன்மை நிலை மீண்டும் நிலைநாட்டப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில், முதலாம் மனுவேல் கொம்னெனோசு இறந்து, கொம்னெனோசு வம்ச ஆட்சியும் முடிவுக்கு வந்ததுடன், பேரரசு மேலும் தளர்ச்சியுற்றது. 1204ல் நிகழ்ந்த சிலுவைப் போரில், கான்சுதந்தினோப்பிள் கைப்பற்றப்பட்டதுடன் பேரரசும் கலைக்கப்பட்டுப் பல்வேறு பைசந்தியக் கிரேக்க, இலத்தீன் போட்டிக் குழுக்களிடையே பங்கிடப்பட்டது. பலையோலோகப் பேரரசர்களால் 1261ல் கான்சுதந்தினோப்பிள் மீளக் கைப்பற்றப்பட்டு பேரரசு மீள்விக்கப்பட்டாலும், அதன் கடைசி 200 ஆண்டுக்காலப் பகுதியில், அப்பகுதியில் போட்டியிட்டுக் கொண்டிருந்த பல நாடுகளுள் ஒன்றாகவே பைசந்தியம் இருக்க முடிந்தது. ஆனாலும் இக் காலப்பகுதியும் மிகச் சிறந்த பண்பாட்டு வளம் கொழித்த ஒரு காலப் பகுதியாகவே விளங்கியது. 14 ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாக இடம் பெற்ற உள்நாட்டுப் போர்கள் பேரரசின் வலிமையைப் பெருமளவு குறைத்ததுடன், பைசாந்திய-ஓட்டோமான் போர்களில் அது எஞ்சிய நிலப்பகுதிகளை இழக்கவும், இறுதியில் 1453ல் கான்சுதந்தினோப்பிளின் வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. 15 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலப் பகுதியில், பேரசின் முழு நிலப் பகுதிகளும் ஓட்டோமான் பேரரசின் வசமானது.



 Thiru Chenduran



உரோமைப் பேரரசு அல்லது ரோமப் பேரரசு (Roman Empire) ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் ஏகாதிபத்திய அரசு ஆகும். இது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளையும் தனது கைவசம் வைத்திருந்த பண்டைக் காலத்து மாபெரும் பேரரசாகும். ரோமப் பேரரசானது 500-ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510 – கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் போர்களால் இப்பேரரசு வலிமை குன்றி பின்னர் பைசண்டைன் பேரரசாக கொன்ஸ்டண்டினோபிள் வீழ்ச்சி (1453) வரை ஆட்சியில் இருந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலப்பகுதி பலராலும் பலவிதமாகத் தரப்பட்டுள்ளது. கிமு 44 இல் ஜூலியஸ் சீசர் பேரரசின் மன்னனாக முடிசூடல், சீசரின் வாரிசான ஆகுஸ்டஸ் செப்டம்பர் 2, கிமு 31 இல் ஆக்டியம் போரில் வென்றமை ஆகியவை சிலவாகும்.
குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 கிமீkm² (2,300,000 sq மைல்) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது.
ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட செப்டம்பர் 4 கிபி 476 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் கடைசி மன்னன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் டயோகிளேசியன் என்ற கடைசிப் பேரரசன் கிபி 305 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. பைசண்டைன் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு 1453 இல் ஓட்டோமான் பேரரசிடம் வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது.


 Thiru Chenduran



பொருளாதாரம்

ஐரோப்பா, நடுநிலக்கடற் பகுதிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, பைசாந்தியப் பொருளாதாரம், பல நூற்றாண்டுகளாக மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தது. குறிப்பாக ஐரோப்பாவில், நடுக்காலத்தின் பிற்பகுதி வரை பைசாந்தியப் பொருளாதாரத்துக்கு இணையாக எதுவும் இருக்கவில்லை. பல்வேறு காலப் பகுதிகளில் ஏறத்தாழ முழு யூரேசியாவையும் வட ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கிய வணிக வலையமைப்பின் முதன்மை மையமாக கான்சுதந்தினோப்பிள் விளங்கியது. குறிப்பாகப் புகழ் பெற்ற பட்டுப் பாதையின் மேற்கு முடிவிடமாக இருந்ததன் காரணமாக இது சாத்தியமானது. சிதைவடைந்து கொண்டிருந்த மேற்கின் நிலைமைக்கு மாறாக, பைசாந்தியப் பொருளாதாரம், வளம் மிக்கதாகவும், நெகிழ்ச்சி உடையதாகவும் இருந்தது.[5] எனினும், யசுட்டினியக் கொள்ளைநோயும், அராபியப் படையெடுப்புக்களும் பைசாந்தியப் பொருளாதாரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தி, அதனைப் பொருளாதாரத் தேக்கத்துக்கும் தொடர்ந்து சரிவு நிலைக்கும் இட்டுச் சென்றது. நிலப்பகுதி சுருங்கி வந்தபோதும், இசாவுரியச் சீர்திருத்தங்களும், குறிப்பாக ஐந்தாம் கான்சுதந்தைனின் மீள் குடியேற்றம், பொது வேலைகள், வரி தொடர்பான நடவடிக்கைகள், போன்றன 1204 வரை தொடர்ந்த ஒரு மறுமலர்ச்சிக் காலத்துக்குக் கட்டியம் கூறின.[6] 10 ஆம் நூற்றாண்டு முதல், 12 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பைசாந்தியப் பேரரசு ஒரு பகட்டுத் தன்மைத் தோற்றத்தைக் கொண்டதாக விளங்கிற்று. அங்கு சென்ற பயணிகள், தலைநகரில் குவிந்திருந்த செல்வ வளத்தினால் கவரப்பட்டனர். நான்காம் சிலுவைப்போர், பைசாந்திய உற்பத்தித் துறையிலும், மேற்கு ஐரோப்பியர் கிழக்கு நடுநிலக்கடற் பகுதியில் கொண்டிருந்த வணிக மேலாண்மை நிலையிலும் தடங்கல்களை ஏற்படுத்தியதுடன், ஏற்பட்ட நிகழ்வுகள் பேரரசின்  பொருளாதாரப் பேரழிவாகவும் அமைந்தன.[7] பலையோலொகோசு வம்சத்தினர் பொருளாதாரத்தை மீள்விக்க முயன்றனர். ஆனால், உள்நாட்டுப் பொருளாதாரச் சக்திகள் மீதோ, வெளிநாட்டுப் பொருளாதாரச் சக்திகள் மீதோ முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க பைசாந்தியத்தினால் முடியவில்லை. படிப்படியாக, வணிக இயக்கமுறை, விலைப் பொறிமுறை, உயர் பெறுமான உலோகங்களின் வெளிச் செல்கை ஆகியவற்றின்மீது கொண்டிருந்த செல்வாக்கையும் அது இழந்தது. நாணயங்களை அச்சிடுவதில் அது கொண்டிருந்த கட்டுப்பாட்டையும் பைசாந்தியம் இழந்துவிட்டதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[8]
பைசாந்தியத்தின் பொருளாதார அடிப்படைகளுள் ஒன்று, அதன் கடல் சார்ந்த தன்மையினால் உருவான வணிகம் எனலாம். அக்காலத்தில் துணி வகைகள் மிக முக்கியமான ஏற்றுமதிப் பண்டமாக விளங்கின. பட்டு, எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, பல்கேரியாவும், மேற்கு நாடுகளும் கூட இதை இறக்குமதி செய்ததாகத் தெரிகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் அரசு இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததுடன், நாணயங்களை வெளியிடுவதிலும் தனியுரிமை கொண்டிருந்தது. வணிகத் தேவைகளுக்கு ஏற்ற, நிலையானதும், நெகிழ்வானதுமான பணமுறையை அது பேணி வந்தது. அரசு, வட்டி விகிதங்கள் மீது முறைப்படியான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததோடு, வணிகக் குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான விதி முறைகளையும் அது உருவாக்கியது. நெருக்கடிகள் ஏற்படும்போது, தலை நகருக்கான தேவைகள் வழங்கப்படுவதையும், தானியங்களின் விலைகள் குறைவாக இருப்பதையும் உறுதி செய்வதற்குப் பேரரசரும், அவரது அலுவலர்களும் தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர். அத்துடன் வரிகள் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியை, அரசு அலுவலருக்கான கொடுப்பனவுகள் மூலமும், பொது வேலைகளில் முதலிடுவதன் மூலமும் அரசு சுழற்சிக்கு விட்டது.

No comments: